indiavaasan

Indiavaasan · @indiavaasan

31st Jul 2014 from TwitLonger

இளையராஜாவும் இட ஒதுக்கீடும்


அன்னக்கிளி என்னத்தேடி வரும்போது மீசை அரும்பும் பருவம்! அதுவரைக்கும் ஹிந்திப் பாட்டு கேட்பதுதான் எங்கள் status symbol!
R.D பர்மன், கிஷோர் குமார், ரஃபி, ஆஷான்னு ஒரு எழுத்தும் விளங்காத பாட்டு! விதி!!
துள்ளிசைன்னாலே ஹிந்திதான் "ரூப்தேரா, மச்சானா, யாருமில்லையா, நீதானா"ன்னு தீவிரமான ஹிந்தி ஞானம்!
ஹிந்தியை ஒழிக்கநினைத்த என் முந்தைய தலைமுறைகூட, இவ்வளவு கொலைவெறியுடன் அந்த மொழியை தாக்கியிருக்காது!
அன்னக்கிளிக்குப் பின்னாடியே கவிக்குயில்!
சரி! ஏதோ மேகம் கருக்குதுன்னு பார்த்தா, அந்திமழை அடித்துப் பெய்ய ஆரம்பித்ததும்தான் எங்களுக்குள்ள கொஞ்சம் நம்பிக்கை ஊற ஆரம்பித்தது!
ஜல்ஜல் என்ற சலங்கைஒலியோடு சிங்காரவேலனைத் தேடிப்போன ஒரு குரல் எங்கள் மொழிக்கு தேசியவிருது வாங்கித்தந்தபோதுதான் " மாப்ள, இந்தாள்கிட்ட ஏதோ இருக்குடா!"ன்னு பேசிக்க ஆரம்பிச்சோம்!
சரசரன்னு புரிஞ்சமொழில மெல்லிசை, துள்ளிசை எல்லாம் புதுவெள்ளமா ஓட, அதுக்கப்புறம் ஹிந்திப்பாட்டை எவன் கேட்டான்?
அப்பத்தான் உண்மையான ஆபத்து வந்துச்சு!
திடீர்னு எல்லாப்பயலும், பாக்கெட்ல சீப்பும், கர்ச்சீப் மடிப்புல பவுடருமா ஒருமாதிரி திரிய ஆரம்பிச்சானுக!
என்னடா, நேத்துவரைக்கும் உன்னி கடைய எண்ணெய் வழிய பஜ்ஜி தின்னவன்லாம் இன்னைக்கு பஸ் ஸ்டேண்டுல வழியறான்னு பாத்தா, லவ்வாம்!!
"ஏன்டா மாப்ள, எப்பப்பாத்தாலும் வயத்தவலிக்காரன் மாதிரியே மூஞ்சிய வச்சிட்டிருக்கே? வாடா நம்ம கேண்டீன்ல ரண்டு வடை சாப்பிட்டு வருவோம், வயித்தில இருக்கறதையெல்லாம் உருவிக் கொட்டீரும்"னா, நம்ம தொரசாமி என்ன ஒரு ஓரமா கூட்டீட்டுப்போய் கேக்கறான்,
"மாப்ள, நீ இந்த இளையராசா பாட்டு கேப்பயாடா?"
நான் ஆமாம்டா எனக்கு ரொம்ப புடிக்கும்டான்னா,
அந்த நாதாரி சொல்லுது " அப்ப எதுக்கும் ஒரு நல்ல டாக்டரா பாத்துரு! இளையராசா பாட்டு கேட்டும் லவ் வரலன்னா ஏதோ கோளாறுடா!!"
என்னடா ஆச்சு நம்ம பசங்களுக்குன்னு சுத்தியும் பார்த்தா, இந்தப் பொண்ணுகளும் ஒரு மார்க்கமாத்தான் சுத்துதுக!
பஞ்சுமிட்டாய் கலர்ல தாவணி போட்டு, தலைய வழிச்சு சீவுன அருக்காணியெல்லாம், காதோரம் ரோசாப்பூ குத்திக்கிட்டு ஶ்ரீதேவி கணக்கா கண்ணக்கண்ண சிமிட்டிக்கிட்டு திரீதுக!
நொந்துபோய் வீட்டுக்கு வந்தா, அன்னைக்குன்னு பாத்து எதிர்வீட்டு கீதா ஒரு வெள்ளைக்கலர் தாவணி போட்டுட்டு அப்படியே ஒலாத்துது! விவித்பாரதில "தம்தனதம்தன தாளம் வரும்"னு கோரஸ்! அப்படியே அந்தப் பொண்ணு ரத்தி! நாம ஆல்ரெடி சோடாபுட்டி பாக்கியராஜ்! புடிச்சுது கெரகம்!!
அதுக்கப்புறம் பாக்கற எல்லாப்புள்ளைங்களுக்கும் உள்ளாற ஒரு பாட்டு ஓடுது!"நான் நடமிட உருகிய தமிழ் மகனே" உடனே நாமதான ஜேசுதாஸ்! ஐ லவ்யூ ஐ லவ்யூன்னு!
நடுவுல அடுத்த சோதனை! பரீட்சை வந்து, வெள்ளாளர்லிருந்து வந்த இன்விஜிலேட்டர் அன்னைக்குன்னு பாத்து, லோலாக்கும், லோ கட்டும்!
தூரத்து பிள்ளையார் கோயில்ல நம்ம கர்மவினை!
"காதோரம் லோலாக்கு, கதெ சொல்லுதடி!"
அன்னைக்கு பரீட்சை ஹால்ல கனவு கண்டு புள்ளப் பெத்ததுக்கு, கெமிஸ்ட்ரி சக்திவேல் சார் பேப்பர் கொடுக்கறப்ப மூஞ்சீல துப்பாததுதான் குறை!
இப்படி எல்லாப்பயலையும் கிறுக்குப்புடிக்கவெச்ச இந்த ஆள் மட்டும், வெள்ளைப் பேண்டும் சட்டையுமா "பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே"ன்னு திருவண்ணாமலைக்கு போய்ட்டாப்பல!
எப்படி ஒரு கள்ளத்தனம் பாருங்க!
இந்த ஆள் மாத்திரம் வந்து இந்த மைக் மோகனுக்கெல்லாம் உருகி உருகி பாட்டுப்போட்டுக் கொடுக்கலன்னா, எனக்கெல்லாம் அக்ரிகேட்ல பத்து பர்சண்ட் கூடியிருக்கும்!
இந்த ஆளால எங்களுக்கெல்லாம் மார்க் போச்சு!
இந்த இளையராஜா சிண்ட்ரோம் பாதிச்ச எங்களுக்கெல்லாம் பத்து மார்க் கூடுதலாப் போட்டு, மேல் படிப்புக்கு 90% ஒதுக்கீடு தரணும்னு நம்ம ப்ரின்சிபால் ஐயாவ கேட்டுக்கறேன்! ஏன்னா, இந்த வியாதி இன்னும் பல தலைமுறைக்கு தீராது!

எப்போதோ கல்லூரி கலை விழாவில் நான் பேசியதில் நினைவில் நின்ற சில - இந்தப்பதிவு!
நாளை இளையராஜா ஈரோடு வருவது கிளப்பிவிட்ட நினைவலைகள்!!!

பி.கு. : போனவாரம் கார்ல "அந்தியிலே வானம் தந்தனத்தோம் பாடும்" பாடி முடிக்க, என் பையன் அவசரமா கேக்கறான்- "அப்பா, இன்னொரு தடவை போடு"!
ஹூம்! அவனுக்கு எந்த பூஜாவோ, ரோஜாவோ!...
இந்த அலை ஓயாது!

Reply · Report Post